நள்ளிரவில் டெம்போ வேன் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

நள்ளிரவில் டெம்போ வேன் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

கலசப்பாக்கம் விண்ணுவாம்பட்டில் நள்ளிரவில் டெம்போ வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அருகே உள்ள விண்ணுவாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் வினோத்குமார் (வயது 35). தந்தை பெயர் ஜெயபால். இவருக்கு சொந்தமாக டெம்போ வேனும், ஆட்டோவும் உள்ளது. 

டெம்போ வேனை தனது வீட்டில் நிறுத்த வசதியில்லாததால் அதே கிராமத்தில் உள்ள தனது நண்பர் நந்தகோபால் என்பவரது வீட்டின் அருகில் நிறுத்தியிருந்தார். கடந்த 1 மாதமாக அந்த வேன் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் நந்தகோபால், இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அந்த டெம்போ வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து பதறி அணைக்க முயற்சித்தார். பிறகு வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தார். 

அவர் வந்து பார்த்த போது வேனின் முன்பக்கம் முழுவதும் எரிந்து போய் இருந்தது. 6 டயர்களும், பின்பகுதிகளும் தீயில் எரிந்திருந்தன. யாரோ மர்ம ஆசாமிகள் பெட்ரோல் ஊற்றி வேனுக்கு தீ வைத்திருப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த வேனை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியில் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். 

இது குறித்து வினோத்குமார், கலசப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ வேனுக்கு தீ வைத்தவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.