அண்ணாமலையார் கோயில் தக்கார் மீனாட்சி சுந்தரம் யார்?

முதலமைச்சர் குடும்பத்திற்கு  வேண்டப்பட்ட டாக்டர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தக்காராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்ட உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. அரசியல் பின்னணி உள்ளவர்களை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக டிவிஎஸ்.ராஜாராம் நியமிக்கப்பட்டார். அறங்காவலர் குழு பதவிக்காலம் 2 வருடம் என்பதால் அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு பதவி காலம் கடந்த ஜூலை முதல் வாரத்தோடு  முடிவடைந்தது. 

புதிய அறங்காவலர் நியமனம் எப்போது என திருவண்ணாமலைக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்ட போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அறங்காவலர் குழு நியமனம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் அறங்காவலராக பதவி வகித்த மீனாட்சி சுந்தரம் தக்காராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தக்காராக பொறுப்பேற்றுக் கொண்ட மீனாட்சி சுந்தரம், பிரபல நரம்பியல் டாக்டர். பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்தவர். சென்னையை சேர்ந்தவர். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற அவரது சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தக்கார் என்றால் என்ன? 

கோயிலின் அறங்காவலர் குழு நியமிக்கப்படும் வரை, அல்லது ஏதாவது காரணங்களால் அறங்காவலர் இல்லாவிட்டால், தற்காலிகமாக ஒருவரை தக்கார் (Trustee) ஆக நியமிப்பார்கள். 

அவர் கோயிலின் நிதி, சொத்துக்கள், மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை கவனித்துக்கொள்வார். 

அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டவுடன், தக்கார் பதவி முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

அண்ணாமலையார் கோயில் தக்கார் மீனாட்சி சுந்தரம் யார்?

----------------------------------------




Post a Comment

0 Comments