நள்ளிரவில் வீடு-கடைகள் இடிப்பு

திருவண்ணாமலையில் நள்ளிரவில் குளிர்பான கடை, டீ கடை மற்றும் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை வேடியப்பன் கோயில் தெருவில் சேர்ந்தவர் முருகன். இவர் கொசமடத் தெருவில் விஜயா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு குளிர்பான கடையை நடத்தி வந்தார். 

நள்ளிரவில் வீடு-கடைகள் இடிப்பு

விஜயா திருமணம் செய்து கொள்ளாத நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவரது சொத்துக்கு விஜயாவின் உறவினர்களான விஜயன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தான் இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி வாரிசுதாரர்கள் என்று ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் சொத்துக்கு உரிமை கொண்டாடி வந்தனர். 

மேலும் இந்த சொத்து யாருக்கு சொந்தம் என இரு தரப்பினரிடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாடகையை எந்த தரப்பினரிடத்தில் செலுத்துவது என்று மனக்குழப்பத்திலிருந்து வந்த முருகன், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து 31-12-2025 வரையிலான மாத வாடகையை நீதிமன்ற வைப்பீடு செய்துள்ளார்.

இதற்கிடையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை நகர போலீசார் முருகனை அழைத்து விசாரித்து நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ள அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முருகனின் குளிர்பான கடை, அந்தக் கட்டிடத்தில் இருந்த டீ கடை மற்றும் வீடு ஆகியவை மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.

நள்ளிரவில் வீடு-கடைகள் இடிப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அவர் விஜயலட்சுமி அவரது கணவர் ஆனந்தன் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக அராஜகப் போக்குடன் எனது கடையை இடித்து விட்டனர். இதனால் கடையில் இருந்த டேபிள், சேர், பிரிட்ஜ், ஐஸ் கூலர், மிக்ஸி, லெசி தயாரிக்கும் மிஷின் உள்ளிட்ட பல பொருட்களும், 200 கிலோ பழங்களும் சேதம் ஆகி உள்ளது. மேலும் கடையில் இருந்த 30,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. சேத மதிப்பு மொத்தம் ரூ. 9 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் இந்த புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து நிறைந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.