திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தில் 74 பஸ்களை நிறுத்திக் கொள்ளலாம். 78 கடைகள், 48 கழிப்பறைகள் அமைய உள்ளது. இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் க.தர்ப்பகராஜ், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா, மேயர் நிர்மலா வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம், ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்,
திருவண்ணாமலை மாநகராட்சியில் திண்டிவனம் சாலையில் 10.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடியே 15 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 74 பஸ்கள் நிறுத்தும் இடம், 78 கடைகள், 2 உணவகங்கள், 48 கழிப்பறைகள் மற்றும் 26 குளியலறை போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் இந்த பஸ் நிலையம் ரூ.14 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நடைபெற்று வருவதை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.
பஸ் நிலையம் விரிவு படுத்தப்படும் பகுதியை பார்வையிட்ட எ.வ.வேலு, கம்பிதான் நீட்டிக் கொண்டிருக்கிறது, பில்லர் ஏன் இன்னும் கட்டவில்லை? என கேட்க செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை முடித்து விடுவதாக ஒப்பந்ததாரார் தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியிலிருந்து அவலூர்பேட்டை சாலையை இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைளை எடுக்கும்படி அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து காந்தி நகரில் 2.67 ஏக்கர் பரப்பளவில் ரூ.29 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல்தளத்தில் 121 பூக்கடைகள் என மொத்தம் 249 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கட்டிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.
வீடியோ லிங்க்
0 Comments