திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதை கட்டயாமாக்கி உள்ளது. இது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமத்தின் கீழ் எஸ்கேபி பொறியியல் கல்லூரி, எஸ்கேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்கேபி வனிதா பன்னாட்டு பள்ளி, எஸ்கேபி வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி, எஸ்கேபி சட்டக்கல்லூரி என ஐந்து கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. வெள்ளிவிழாவை கண்ட எஸ்கேபி கல்வி குழுமம் தலைக்கவசம்(ஹெல்மெட்) கட்டாயம் அணிந்து வரும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. அதன்படி ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் கல்லூரிக்குள் நுழைய முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இது குறித்து இக்கல்விக் குழும தலைவர் கு.கருணாநிதி, இணைச் செயலாளர் கே.வி.அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது,
இக்கல்வி குழுமத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள், பயின்று வருகிறார்கள். அதேபோல் பெருமளவில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பல்வேறு துறை ஊழியர்கள், என பலதரப்பட்ட ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
'தலைகவசம் என்பது உயிர்கவசம்' ஆகும். எனவே விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இக்கல்லூரிக்கு வரும் பொழுது தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். இதனால் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர் பெருமக்கள் என அனைவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து வருகிறார்கள்.
தலைக்கவசம் அணியாமல் வந்தால் கல்லூரி நுழைவாயிலில் தடுக்கப்படுகிறார்கள். இதனை கண்காணிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கல்லூரி நுழைவாயில் நின்று கண்காணித்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த அபராத தொகையிலேயே அவர்களுக்கே தலைக்கவசம் வாங்கி கொடுக்கிறோம்.
அதேபோல் கல்லூரிக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தலைக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்துகிறோம். இதனால் கல்லூரி மட்டுமல்லாமல் மற்ற இடங்களுக்கு செல்லும்பொழுது கூட தலைக்கவசம் அணிந்து சென்றால் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் கொண்டு வந்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எஸ்கேபி கல்விக் குழுமத்தின் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்று உள்ளனர்.
----------------------------------------
Social Plugin