திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை முடிவு எடுத்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் காமராஜர் சிலை அருகில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வந்தது.கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்த பிறகு இந்த மருத்துவமனை செயல்படாமல் முடங்கி கிடந்தது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அப்போது அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். போராட்டமும் நடத்தப்பட்டது.
அதன் பிறகு மருத்துவரும், பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். சளி, ஜுரம், வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஊசி போடப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. 24 மணி நேரமும் இம் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. மேல் சிகிச்சை தேவைப்படுவோர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனால் நகரின் மையப்பகுதியில் உள்ள பொதுமக்களும், சுற்றுப்புற கிராம மக்களும், கிரிவலம் செல்லும் பக்தர்களும் பயன் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையை மூடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மருத்துவர், ஊழியர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரைகள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பணியில் உள்ள ஒரே ஒரு ஊழியர் காய்ச்சலுக்கான மாத்திரைகளை மட்டும் தற்போது வழங்கி வருகிறார்.
இதனால் சளி, ஜூரத்திற்கும், உடல் உபாதைகளுக்கும் மருத்துவமனையை நாடி வந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமுத்திரம் காலணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நிலையில் பழைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இங்கு அனுப்புவதால் கூடுதல் சுமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. பழைய மருத்துவமனை கட்டிடம் அரசு மாணவர் விடுதியாக மாற இருப்பதால் மருத்துவமனை மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
![]() |
| டாஸ்மாக் கடை |
அந்த மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட சொன்னால் அரசு மருத்துவமனையை மூடுவதா? என கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள், பக்தர்கள் நலனை பற்றி கவலைப்படாமல் பழைய மருத்துவமனை மூடும் நடவடிக்கையை எடுத்துள்ள மருத்துவ துறை உயர் அதிகாரிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சாமரம் வீசுவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் விசாரணை நடத்தி மீண்டும் மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள்-பார்த்திபன்




0 Comments