திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு,
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் (Public Prosecutor), கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர் (Additional Public Prosecutor), அரசு சிறப்பு வழக்குரைஞர் (Special Public Prosecutor), அரசு வழக்குரைஞர் (Government Pleader), கூடுதல் அரசு வழக்குரைஞர் (Additional Government Pleader) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரால் ந.க.எண்.4594726/2026/C4, நாள்.05.06.2026-ன்படி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, உள்துறை (நீதிமன்றங்கள்--VIA) துறை கடித எண்.9987/Cts.VIA/2026-6, நாள் 07.08.2026-ல் வழங்கியுள்ள கூடுதல் விளக்கம் மற்றும் அறிவுறுத்தலின்படி, விரைவு மகளிர் நீதிமன்றம், திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கான அரசு சிறப்பு வழக்குரைஞர் (Special Public Prosecutor) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி தொடர்பாக கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது:-
அரசு சிறப்பு வழக்குரைஞர், விரைவு மகளிர் நீதிமன்றம், திருவண்ணாமலை பணியிடத்திற்கு வழக்கறிஞராக 10 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட பணியிடத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பித்துள்ள வழக்கறிஞர்களில், விண்ணப்பம் சமர்ப்பித்த நாளன்று 10 ஆண்டுகளுக்கு குறையாத வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களது ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பித்திருந்தும், 10 ஆண்டுகளுக்கு குறையாத வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாதவர்கள், தங்களது தகுதிக்கேற்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பிற அரசு வழக்குரைஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
10 ஆண்டுகளுக்கு குறையாத வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்ற தகுதியுடைய வழக்கறிஞர்கள், மேற்கண்ட அரசு சிறப்பு வழக்குரைஞர் பணியிடத்திற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், தங்களது விண்ணப்பங்களை உரிய படிவங்களில் (Annexure-I & II),தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆறு (6) பிரதிகளில் மற்றும் 2 சமீபத்திய கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் 29.08.2026 மாலை 05.45 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
இவ்வாறு கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.


0 Comments