பேகோபுரம் எதிரில் தனுஷ் படப்பிடிப்பு-பக்தர்கள், பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியில் தனுஷ் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பேகோபுரம் எதிரில் தனுஷ் படப்பிடிப்பு-பக்தர்கள், பொதுமக்கள் அவதி

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் தனுஷ் கதாநாயகனாகவும், மம்மூட்டி, சாய் பல்லவி முக்கிய வேடங்களிலும் நடிக்கும் ஓம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.

நேற்று திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதை ஒருவர் வீடியோ எடுத்து முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று காலை திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் அண்ணாமலையார் கோயிலின் மேற்கு கோபுரமான பேகோபுரம் பகுதியில் தனுஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்பகுதியில் யாரும் வராதபடி பார்த்துக் கொள்ள ஏராளமான பவுன்சர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென நடைபெற்ற படப்பிடிப்பினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பேகோபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் சுதந்திரமாக தெருக்களில் நடமாட முடியாதபடி பாதுகாவலர்கள் தடை செய்தனர். மேலும் பக்தர்கள் கூட்டத்தையும் விரட்டி அடித்தனர். இதனால் அந்த வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கேள்வி கேட்ட பத்திரிகையாளரையும், பொதுமக்களையும் பவுன்சர்கள் மிரட்டினர். 

பேகோபுரம் எதிரில் தனுஷ் படப்பிடிப்பு-பக்தர்கள், பொதுமக்கள் அவதி

போக்குவரத்து நெரிசல் மிகுந்த அதுவும் கோயிலுக்கு பக்தர்கள் வரக்கூடிய பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததோடு பக்தர்கள், பொதுமக்கள், குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய படப்பிடிப்பு குழுவினர் மீது கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது பற்றி போலீஸ் தரப்பில் கேட்ட போது படப்பிடிப்பு குழுவினர் கலெக்டரிடம் அனுமதி பெற்றிருக்கின்றனர். காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை. போக்குவரத்து நெரிசலை கேள்விப்பட்டு பாதுகாப்பு அளித்தோம் என்றனர். 

இதே போல் கடந்த 2023-ஆம் ஆண்டு திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படத்தின் காட்சிகளை படமாக்கினார். இதனால் அப்பகுதியில் யாரும் நுழையாதபடி பவுன்சர்கள் கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். மேலும் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். இதோடு மட்டுமன்றி தாலுகா அலுவலகத்தின் பெயர் பலகையை சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எனவும் மாற்றியிருந்தனர். 

வேலைநாளான அன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அலுவலகத்தின் பெயர் மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ.சேவை மையம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மாணவ-மாணவியர்கள் விடுதி, உழவர் சந்தை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் போக முடியாத நிலை ஏற்பட்டது. 

இது சம்பந்தமாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அப்போதிருந்த ஆளும்கட்சி தலையீட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments