இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு பார்ட்னர்கள் தேர்வு-கலெக்டர் தகவல்

இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு பார்ட்னர்கள் தேர்வு-கலெக்டர் தகவல்

கிராமப் புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் தற்போது ஆரணி மற்றும் செய்யாறு வருவாய் கோட்டங்களுக்கு தொழில் பங்கீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (District Level Franchisee Partners % DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்காக 01.01.2026 அன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அது ₹20 லட்சம் மற்றும் அதற்கு மேல் என தளர்த்தப்பட்டுள்ளது.

இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு பார்ட்னர்கள் தேர்வு-கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப்பணிகள் தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துணைப்பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் தற்போது ஆரணி மற்றும் செய்யாறு வருவாய் கோட்டங்களுக்கு தொழில் பங்கீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டம் மற்றும் / அல்லது  அவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.

இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு பார்ட்னர்கள் தேர்வு-கலெக்டர் தகவல்

விண்ணப்பபதிவு நடைமுறை TANFINET  இணையதள போர்டல் https://tanfinet.tn.gov.in மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்படவிரும்பும் துணைப்பிரிவை (Division) தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு துணைப்பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்பபாதுகாப்பு வைப்புதொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ₹2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர் TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.

மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது சம்மந்தமாக விவரங்களை தெரிந்து கொள்ள [HELPDESK NO.:044-24965595]  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களுக்கான TANFINET இணையதளபோர்டல் 12.08.2026 முதல் மீண்டும் செயல்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு  கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments