திருவண்ணாமலை:ஆம்னி பஸ்களை சிறைபிடித்த அதிகாரிகள்

திருவண்ணாமலை:2 ஆம்னி பஸ்களை சிறைபிடித்த அதிகாரிகள்

திருவண்ணாமலையில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் விதிமீறலில் ஈடுபட்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 35 ஆம்னி பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் விதிமுறை மீறலால் 120 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதே போன்று திருவண்ணாமலையிலும் 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இது பற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்திருப்பதாவது,  

சென்னை ஆம்னி பேருந்துகளின் மீதான சிறப்புத் தணிக்கை போக்குவரத்து ஆணையர் உத்தரவிற்கிணங்க, விழுப்புரம் சரக துணைப் போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் தலைமையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சி.சிவகுமார். கே.சரவணன், மேற்பார்வையில் மோட்டார். வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, முருகேசன்,  கருணாநிதி அடங்கிய குழு திருவண்ணாமலை புறவழிச்சாலையில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை சோதனை நடத்தியது. 

சோதனையில் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குரிய சாலை வரி செலுத்திய விவரம், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்ட விவரம் ஆகியவை வீதி மீறல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ஆய்வின் போது வீதி மீறலில் ஈடுபட்ட பிற மாநில இரண்டு ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேற்படி இரண்டு பேருந்துகளுக்கும் சாலை வரியாக ரூ.3லட்சத்து 50 ஆயிரம் மற்றும் அபராதமாக இணக்க கட்டணம் ரூ.30 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சோதனையின் போது மேற்படி இரண்டு பேருந்துகள் தவிர 35 ஆம்னி பேருந்துகளுக்கு பிற காரணங்களுக்காக சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.58 ஆயிரத்து 500 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அபராதமாக ரூ.35 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

-படங்கள்-மணிமாறன்