திருவண்ணாமலையில் அரசு வங்கி கேஷியர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது பற்றிய விவரம் வருமாறு,
மயிலாடுதுறை மாவட்டம் எடக்குடியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 54). இவருக்கு 2 பிள்ளைகள். மகள் ஆனந்தி(30). பாங்க் ஆப் பரோடா திருவண்ணாமலை கிளையில் தலைமை காசாளராக பணிபுரிந்து வந்தார்.
திருமண தகவல் மையம் மூலமாக ஆனந்திக்கு பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரோடு கடந்த 1வருடத்திற்கு முன்பு இருவீட்டார் சம்பந்தத்தோடு திருமணம் நடந்தது. திருவண்ணாமலை பேகோபுரம் 3-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக 10 பவுன் நகை, கார் கேட்டு ஆனந்தியை சித்ரவதை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது பற்றி ஆனந்தி, தந்தையிடம் சொல்லி அழுதாராம். இந்நிலையில் நடராஜனின் வாட்ஸ் அப்க்கு கடந்த 18ந் தேதி அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக சீனிவாசன் தகவல் அனுப்பியிருந்தாராம்.
இதனால் நடராஜன், அவரது உறவினர்கள் திருவண்ணாமலைக்கு வந்து போலீஸ், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் தொங்கி கொண்டிருந்த ஆனந்தியின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க்பபட்டது.
மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக நடராஜன் திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சீனிவாசனையும், அவரது பெற்றோர்களையும் கைது செய்யக் கோரி ஆனந்தியின் தந்தையும், உறவினர்களும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
Social Plugin