திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 29-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
நேரடி நியமனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://www.drbtvmalai.net என்ற இணையதளம் வழியாக (online) மட்டுமே 29-8-2025 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
109 காலி பணியிடங்கள் விவரம்
1) திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி- உதவியாளர் பணி- 22- சம்பள விகிதம் ரூ.23,640- ரூ.96,395
2) நகர கூட்டுறவு வங்கி- உதவியாளர் பணி- 15- சம்பள விகிதம் ரூ.19,850- ரூ.64,200
3) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்- உதவியாளர்(எழுத்தர்)- 64- சம்பள விகிதம் குறைந்த பட்சம் ரூ.11,100- ரூ.32,910, அதிகபட்சம் ரூ.17,600- ரூ.76,380
3) பணியாளர் கூட்டுறவு சங்கம்- உதவியாளர் பணி- 1- சம்பள விகிதம் ரூ.15,000- ரூ.47,600
4) தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி- உதவியாளர், மேற்பார்வையாளர் பணி- 4- சம்பள விகிதம் ரூ.14,000- ரூ.60,000
5) வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்- உதவியாளர் பணி- 2- சம்பள விகிதம் குறைந்த பட்சம் ரூ.9,600- ரூ.47,400, அதிகபட்சம் ரூ.9,900- ரூ.53,400
6) கூட்டுறவு பண்டகசாலை- மேற்பார்வையாளர்- 1- சம்பள விகிதம் ரூ.11,000- ரூ.45,100
இத்தெரிவுக்கு நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்குப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு மற்றும் இனச் சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.
24ந் தேதி எழுத்து தேர்வு
இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
தகுதிகள் வருமாறு,
இப்பணிகளுக்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்)
பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்
1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management)
2. சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management).
பயிற்சி பெறுவதற்கு விலக்கு
பின்வரும் பட்டப் படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள்.
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு, எம்.காம் (கூட்டுறவு), எம்.ஏ (கூட்டுறவு)
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு.
பி.ஏ (கூட்டுறவு), பி.காம் (கூட்டுறவு)
பி.ஏ(கூட்டுறவு), பி.காம்(கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்குப்பதிவியல் ((Book Keeping), வங்கியியல்(Banking), கூட்டுறவு (Cooperation), தணிக்கை(Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.
2024 −25 ஆம் ஆண்டில் 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நடத்துப்படும் முழு நேர கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப் பெற்று வருவதற்கான சான்றிதழினை (Bonafide Certificate) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
ஆங்கிலம், தமிழில் வினாத்தாள்
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்படும். எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும், தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நேரும் போது, விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதில் தாமதமோ அல்லது தொழில் நுட்பச் சிக்கல்களோ எழ வாய்ப்புள்ளது.
மேற்கூறிய தொழில்நுட்பக் காரணங்களால் அல்லது வேறு காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைக் கடைசிக் கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது.
விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான வசதி உடனடியாக நிறுத்தப்படும்.
உதவி மைய எண்
விண்ணப்பக் கட்டணம் செலுத்தியது தொடர்பான பிரச்சினை குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாயின் அப்பிரச்சினை ஏற்பட்ட 3 நாட்களுக்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திடம் உரிய காரணங்களுடன் முறையீடு செய்ய வேண்டும். அதற்குப் பின் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 04175-298341 என்ற திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் உதவி மைய எண்ணிலோ அல்லது jrcstvm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (https://www.drbtvmalai.net) வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------
0 Comments