பர்வதமலை: 2 பெண் பக்தர்கள் உடல்கள் மீட்பு

பர்வதமலைக்கு சென்று திரும்பும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் ஒரு பெண்ணின் உடல் மண்ணில் புதைந்து கிடந்த நிலையில் 5 மணி நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்கப்பட்டது. 

திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில். 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது ஏராளமானனோர் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

கடந்த பவுர்ணமி நாளில் பக்தர்கள் பலர் பர்வதமலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமையும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 

இதில் சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த இந்திரா, தங்க தமிழ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து வேன் மூலம் புறப்பட்டு அதிகாலை பர்வதமலையை வந்தடைந்தனர். இவர்கள் ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களிலும், ஐ.டி.கம்பெனிகளிலும் வேலை செய்பவர்கள். 

நேற்று அதிகாலை 5 மணி அளவில் பர்வதமலை அடிவாரமான பச்சையம்மன் கோயிலில் இருந்து மலையேறினார். பிற்பகல் மலை உச்சியை சென்று அடைந்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பர்வதமலை அடிவாரமான வீரனார் கோயில் அருகே பாதையின் குறுக்கே ஓடையில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. 

இந்திரா

மாலை 6 அளவில் பர்வதமலை அடிவாரமான வீரனார் கோயில் அருகே வந்த போது ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து வந்தவர்களில் 15 பேர் ஓடையை கடந்து சென்று விட்ட நிலையில் மற்றவர்கள்  ஒருவருக்கொருவர் கையை கோர்த்து கொண்டு ஓடையை கடந்தனர். கடைசியாக வந்த இந்திரா (53) தங்க தமிழ் (35) ஆகியோர் ஓடையில் திடீரென பெருக்கெடுத்து வந்த காட்டாற்றில் அடித்து செல்லப்பட்டனர். 

உடனடியாக உடனிருந்தவர்கள் வனத்துறையினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்.பி. சுதாகர், எம்.எல்.ஏக்கள் பெ.சு.தி.சரவணன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மீட்பு பணியை பார்வையிட்டனர். 

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், மலை அடிவாரம் முழுவதும் மின்விளக்கு இல்லாததாலும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. மீட்பு பணிக்கு வர அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. 

இன்று காலை 6 மணி அளவில் தேடுதல் பணியை துவங்கியது. வீரனார் கோயில் ஓடையில் இறங்கி உடலை தேடினர். அப்போது அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த தடுப்பணை அருகே இந்திராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

பர்வதமலை: 2 பெண் பக்தர்கள் உடல்கள் மீட்பு

ஆனால் தங்க தமிழ் உடல் கிடைக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணி அளவில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் தீபக் குமார் தலைமையில் வந்து தனித்தனி குழுக்களாக பிரிந்து காட்டாறு வெள்ளம் செல்லக்கூடிய அந்தப் பாதை மற்றும் அந்த தண்ணீர் சென்று அடையக் கூடிய தென்மகாதேவமங்கலம் ஏரி உள்ளிட்ட இடங்களில் தங்க தமிழ்  உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வீரனார் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் இடைவெளியில் உள்ள நான்காவது செக் டேம் அருகில் மண்ணில் புதைந்தும், செடிகளில் சிக்கிக் கொண்டிருந்த நிலையிலும் கிடந்த தங்க தமிழின் உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். அப்போது அந்த இடத்தில் இருந்த தங்க தமிழின் பிள்ளைகளும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.  

பவுர்ணமி நாளிலும், மறுநாள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததை கருத்தில் கொண்டும், 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் மலையேறிய பக்தர்கள் கீழே இறங்கி வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வனத்துறை தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அந்த ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படாதது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றனர். 

இந்நிலையில் போதுமான பாதுகாப்பு வசதியும், சாலை வசதிகளும் வனத்துறை பகுதியில் இல்லாததால் பர்வதமலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேற அனுமதி வழங்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

--------------------------------- 

வீடியோவை காண..

https://www.facebook.com/share/v/17BNzcdCaR/


Post a Comment

0 Comments