இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம், பெண்களுக்கான நுண் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம் மற்றும் கறவை மாடுக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அதன்படி வரும் 22ந்தேதி அன்று திருவண்ணாமலை, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 23ந்தேதி அன்று செய்யாறு, போளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 24ந்தேதி அன்று சேத்பட், கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 26ந்தேதி அன்று ஆரணி, செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 29ந்தேதி தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று (சாதிச்சான்று) ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவுப்பங்கீடு அட்டை இருப்பிடச்சான்று கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம், (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், மாணவர் என்தற்கான உறுதிச்சான்றிதழ் கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய புத்த, பார்சி ஜெயின் ஆகிய சமூகத்தினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments