திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கோயிலில் நடைபெற்ற விழாவில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர். அழகி போட்டியும் நடைபெற்றது.
திருவண்ணாமலையிலிருந்து மங்கலம் செல்லும் வழியில் உள்ளது வேடந்தவாடி கிராமம். இங்கு 200 ஆண்டுகளுக்கு முந்தைய கூத்தாண்டவர் கோயில் உள்ளது. அந்த காலத்தில் ஆடு¸ மாடுகள் அதிக அளவில் திருடு போயின. இதை தடுத்து எல்லை தெய்வமாக இருந்து கூத்தாண்டவர் விலங்குகளையும்¸ மக்களையும் காப்பாற்றினார்.
இதைத் தொடர்ந்து கிராம மக்கள் கூத்தாண்டவருக்கு ஒவ்வொரு வருடமும் விழா எடுத்து சிறப்பிக்கப்பிக்கின்றனர்.
மகாபாரத போரில் உயிரை தியாகம் செய்ய முன் வந்த அரவானை பலி கொடுக்கும் முன்னர் அரவானின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவனை மோகினி அவதாரமெடுத்து கிருஷ்ணர் மணந்து கொண்டார். ஆசை நிறைவேறியதும் அரவான் பலி கொடுக்கப்பட, மோகினி விதவையானாள்.
இதை நினைவு கூறும் வகையில் அரவானின் வடிவமான கூத்தாண்டவருக்கு திருவிழா நடத்தப்படுகிறது. வேடந்தவாடியில் எல்லை காவல் தெய்வமாக விளங்கி வரும் கூத்தாண்டவரை அவலூர்பேட்டை¸ மங்கலம்¸ பூதமங்கலம்¸ கீழ்பென்னாத்தூர்¸ ஆர்ப்பாக்கம்¸ எரும்பூண்டி உள்பட 50 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிராம மக்கள் வணங்கி வருகின்றனர்.
இவர்களோடு சேர்த்து திருநங்கைகளும் மோகினியாக தங்களை நினைத்து தாலி கட்டுதல்¸ தாலி அகற்றுதல் என கூவாகம் போல் சடங்குகளை செய்து வழிபட்டு வருகின்றனர்.இந்த வருடம் 203-வது ஆண்டாக திருவிழா நடைபெற்றது.
மகாபாரதத் தொடர் சொற்பொழிவுடன் கடந்த 30-ந் தேதி விழா தொடங்கியது. கிராம மக்கள் சாமிக்கு ஊர்வலமாக வந்து சாமிக்கு பொங்கல் வைத்தனர். அன்று இரவு வாணவேடிக்கையுடன் சாமி திருவீதி உலா நடைபெற்றது. 4-ந் தேதி பாஞ்சாலி திருமண விழாவும்¸ 5-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பும்¸ நடந்தன.
13-ந் தேதி திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மும்பை¸ சென்னை¸விழுப்புரம்¸ திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து திருநங்கைகள் கலந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. போட்டியை திரைப்பட நடிகை நமீதா துவக்கி வைத்தார். அப்போது பாஜக நிர்வாகி வழக்கறிஞர் சங்கர், காண்டீபன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
![]() |
அழகி போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் |
அழகி போட்டியில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா முதல் பரிசை தட்டிச் சென்றார். பின்னர்¸ பெண் அழைப்பு¸ திருநங்கைகளுக்கான திருமணச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர்.
முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி¸ விநாயகர்¸ கூத்தாண்டவர்¸ காமாட்சியம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேக¸ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து¸ 3 சாமிகளும் மலர்களால் அலங்கரித்து¸ தேர்களில் வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது. தேர் புறப்படுவதற்கு முன்பு திருநங்கை கழுத்தில் கோயில் பூசாரி தாலி கட்டினார். விநாயகர் தேர்¸ கூத்தாண்டவர் தேர்¸ காமாட்சியம்மன் தேர் என தேர் என 3 தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வீதி உலா வந்தன. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அரங்கநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு திருநங்கைகளின் தாலிகளை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கோ.இளஞ்செழியன், வேடந்தவாடி பெரிய கவுண்டர் வகையறா மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
-------------------------------------
வீடியோ லிங்க்-
0 Comments