திருவண்ணாமலை அருகே நித்தியானந்தருக்கு சொந்தமான நிலத்தில் மண் திருடியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாமியார் நித்தியானந்தருக்கு சொந்தமான பரம்பரை சொத்து திருவண்ணாமலை கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ளது. இங்கு இயற்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் கோசாலையும் உள்ளது. மேலும் நித்தியானந்தாவின் தாத்தா, பாட்டி, தந்தை ஆகியோரின் நினைவிடங்களும் உள்ளன.
இந்நிலையில் அந்த நிலத்துக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து லாரிகளில் பல லோடு மண்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகள் சார்பில் தச்சம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை நித்தியானந்தா தியான பீடத்தைச் சேர்ந்த ஸ்ருதி, சூரியகுமார் ஆகியோர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
![]() |
தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் |
கீழ்கச்சிராப்பட்டில் உள்ள எங்களது 9 ஏக்கர் நிலத்திற்கு தினமும் வந்து சென்று கொண்டிருப்போம். பவுர்ணமி நேரத்தில் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்க வேண்டியிருப்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காக 1 வார காலம் நிலத்திற்கு செல்ல மாட்டோம்.
அந்த நேரத்தில் சிலர் நிலத்திற்குள் நுழைந்து ஜேசிபி, லாரி மூலம் நிலத்தில் இருந்த மண்களை திருடி உள்ளனர். 200 லோடு மண் திருடப்பட்டுள்ளது.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் தச்சம்பட்டு போலீசார் நாராயணன், சங்கர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்தியானந்தா நிலத்தில் மண் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments