மலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதாக மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன்தான், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்குளும் கட்ட அனுமதிக்கலாம் என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஜகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். மலை மீது எத்தனை கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். மலை மீது 6 ஆயிரம் வீடுகள் உள்ளது. 1535 வீடுகள் அபாயகரமான இடத்தில் உள்ளது தெரிய வந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 1535 வீடுகள் அகற்றுவது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் மலை மீது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டது ஏன்? இப்போது உள்ள கலெக்டர், கோர்ட்டு அமைத்த குழு கூட்டத்தை நடத்தாதது ஏன்? 3 மாதமாக என்ன செய்து கொண்டிருந்தார்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து ஜூன்13-ஆம் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோர்ட்டு அமைத்த குழுவின் கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்த கூட்டம் முடிந்த சில தினங்களில் மலை மீது கணக்கெடுக்கப்பட்ட வீடுகளுக்கு தபால் மூலம் நோட்டீஸ் சென்றடைந்தது. தாசில்தார் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது,

திருவண்ணாமலை 1/4. 4வது புதுத் தெரு, 1வது சந்து என்ற முகவரியில் வசிக்கும் மணிமாறன் என்பவருக்கு கீழே கண்டுள்ள விவரப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசினர் சொத்தாக இருக்கிற நிலத்தை அனுமதி பெறாமல் நீங்கள் அனுபோகத்தில் வைத்துக்கொண்டு இருப்பதாகத் தெரிய வருவதால் ஏன் உங்களுக்குத் தீர்வை விதிக்கக்கூடாது அல்லது நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி அதிலுள்ள பயிர்கள். விளைச்சல்கள், கட்டுமானங்கள் கட்டடங்கள், அதில் விட்டு வைத்திருக்கப்பட்டுள்ளவை ஆகிய இவைகள் ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கும் காரணத்தை நீங்கள் விரும்பினால் கடிதம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் நேரிலாவது அல்லது எழுத்து வடிவிலாவது தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

மலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோர்ட்டு அமைத்த குழுவின் கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் தர்ப்பகராஜ், வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து நேற்று மாநகராட்சி சார்பில் மலை மீது ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற அவசர அறிவிப்பு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி ஆணையாளர் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது, 

பார்வையில் காணும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் வார்டு எண் 1, 6, 7, 14, 24, 26 கிரிவலப்பாதையில் அமைந்துள்ள மலையின் மீது கட்டப்பட்டுள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிட ஆக்கிரமிப்புக்களை அகற்றும்படி, தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

எனவே. மேற்படி தீர்ப்பின்படி சொத்துவரி விதிப்பு செய்தது, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்ட 143 எண்ணிக்கையிலான வரிவிதிப்பு எண்களை கணினியில் ரத்து செய்தும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 2022 (திருத்தப்பட்ட சட்டம் 35/2022) மற்றும் தமிழ்நாடு நகர்ப்ற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன் பிரிவு 160ன்படி மலையின் மீது கட்டப்பட்ட கட்டிடங்களில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு குடியிருப்புவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

------------------------------------

வீடியோ செய்திகளுக்கு, 


NEWS THIRUVANNAMALAI

Post a Comment

0 Comments