திருவண்ணாமலையில் 56 வருட அண்ணா சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை எடத்தெரு, கொசமடத் தெரு சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை அமைந்திருந்தது. இதனால் இந்த சாலை அண்ணா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
1969-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி அண்ணாவிற்கு தமிழக முழுவதும் சிலைகளை வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி திருவண்ணாமலையில் அமைச்சராக இருந்த ப.உ.சண்முகம், மாவட்ட திமுக செயலாளராக இருந்த இரா.தர்மலிங்கம் ஆகியோரது ஏற்பாட்டின் படி மேற்கண்ட இடத்தில் அண்ணா சிலை நிறுவப்பட்டது.. சிலையை திறந்து வைக்க முதலமைச்சராக இருந்த கருணாநிதி, திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் ஆகியோர் திருவண்ணாமலைக்கு வந்து செங்கம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை விடுதியில் தங்கியிருந்தனர்.
பிறகு திறந்த ஜீப்பில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ப.உ.ச. ஆகியோர் நின்று கொண்டு வந்தனர். அண்ணா சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. எம்ஜிஆர் தலைமையில் அண்ணா சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு விழா 12-10-1969 அன்று நடைபெற்றது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் தலைமையில் கருணாநிதி திறந்து வைத்த அந்த அண்ணா சிலை நேற்று இரவோடு இரவாக அகற்றப்பட்டது. பீடமும் இடித்து தள்ளப்பட்டது.
ஏற்கனவே திருவள்ளுவர், காந்தி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு புதிய சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இதனால் சிலையின் முன்பு அவரது பெயர் பொறித்த கல்வெட்டு பதிக்கப்பட்டது. பழைய கல்வெட்டு சிலையின் பக்கவாட்டில் வைக்கப்பட்டது.
அதே போல் தான் அண்ணாவிற்கும் புதிய சிலை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், புதிய சிலையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைப்பார் என்றும், அதில் எ.வ.வேலுவின் பெயர் பொறித்த கல்வெட்டு பதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
வீடியோ லிங்க்
0 Comments